மாதேஸ்வர மலை பயணம்
விடுமுறை கிடைகாத நிலையிலும் நமது அடுத்த மலை பயணம் பற்றி சிந்தித்து கொண்டிருக்கையில் , உடனே நினை விற்கு வந்தது அருகில் உள்ள மாதேஸ்வர மலை தான், காரணம் சேலத்தில் இருந்து சுமார் 2 மணி நேரத்தில் சென்று விட முடியும் என்பது மட்டும் அல்ல , பயணபாதை மிகவும் அழகான ரமியமான காட்டுப்பாதை, வழி எங்கும் சுவாரசியமான விசியங்கள் நிறைய உள்ளன ,இருசக்கர வாகனத்தில் சென்றால்தான் இயற்கை அழகை முழுமையாக ரசிக்க இயலுமென்பதால் இரண்டு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு காலை 6 .00 மணிக்கெல்லாம் சேலத்தில் இருந்து கிளம்பியாகி விட்டது .
மாதேஸ்வரன் மலை!! தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில், கர்நாடகாவிற்குள் அமைந்துள்ள இவ்விடம் இரண்டு விஷயங்களுக்காகப் பிரசித்தம். ஒன்று, முன்னொரு காலத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் உறைவிடம்; இரண்டாவதாக, இங்கு மலை மீதிருக்கும் மாலே மாதேஸ்வரன் கோவில் (சிவன்).
கர்நாடகாவில் பெயர் சொல்லும்படியாக அமைந்துள்ள கோவில் என்றாலும், இரு மாநில அரசுகளுமே இவ்விடத்திற்கு போதுமான பேருந்து வசதிகளை ஏனோ செய்யவில்லை. ஏதோ அவ்வப்பொழுது மணிக்கொருமுறை கடமைக்காக இயக்கப்பட்ட தமிழக அரசாங்கப் பேருந்துகளை வழியில் பார்க்க முடிந்தது. அவையும் ஏதோ ஸ்தூல சரீரமுடைய வயோதிகர்களைப் போல முக்கி முனகி ஏற முடியாமல் ஏறிக் கொண்டிருந்தன.
சேலத்திலிருந்து மேட்டூர், ஒரு மணிநேரப் பயணம். மேட்டூரிலிருந்து மூலக்காடு, கொளத்தூர், கோவிந்தப்பாடி வழியாக சுமார் 60 கிமீ தொலைவு. கோவிந்தப்பாடியிலிருந்து துவங்கும் மலைப்பாதையில் மொத்தமாக 18 கொண்டை ஊசி வளைவுகள். மேட்டூரிலிருந்து துவங்கினால் மலையடிவார கிராமங்கள் அனைத்தும் டிபிகல் கிராமங்களாகவே நகரவாசனையின்றி கற்பிழக்காமல் இருந்தது சற்றே மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
ஆனால் கொளத்தூர்ல் ஒரு மான்ஃபோர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியும், தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற்போன்ற தோற்றமுடைய ஒரு பொறியியல் கல்லூரி வணிக ஸ்தலமும் இருந்தது.
மேட்டூரில் இருந்து கொளத்தூர் செல்லும் வழியில் மூலகாடு என்று ஒரு கிராமம் அதிலிருந்து வலது புறம் ஏதோ சந்தேகத்திற்கிடமான ஒரு ஒற்றையடிப் பாதை வழியாக பாறைகள் நிறைந்த இடுகாட்டிற்கு இட்டுச் சென்று இரு சமாதிகள் முன்பு நிறுத்தினார். நண்பர்,
ஆஹா அற்புதம் அவற்றில் தேசியக் கொடிகள் செறுகப்பட்டு, ஏதோ பூஜைகள் நிகழ்த்தப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஏதாவது சுதந்திரப் போராட்டத் தியாகியா என்று யோசிக்குமுன்பு அவர் சொன்னது சற்றே திகைப்பையும், அதிர்ச்சியையும் அளித்தது.
அது மூலக்காட்டிலுள்ள சந்தன வீரப்பன் சமாதி; அருகே சேத்துக்குளி கோவிந்தன். இவர்களுக்குத்தான் தேசியக் கொடியை நட்டு, ஆடு, கோழிகளை பலியிட்டு பூஜை, புனஸ்காரங்களை நிகழ்த்தியிருந்தனர். அரசியல்வாதிகள் துவங்கி ஆட்கொல்லிகள் வரை சமூகவிரோதிகளையே ஆதர்ஸமாகக் கொள்ளும் நமது பண்பாட்டிற்கு இது ஒரு கண்கூடான உதாரணம்.
எண்ணிலடங்கா கொலைகளை நிகழ்த்தியவனை ஏதோ எல்லை தெய்வமாகப் போற்றி பலி கொடுத்து கொண்டாடுகின்றனர். இது போதாதென்று நினைவு மண்டபம் கட்ட வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாம். அரசாங்கத்தின் கெடுபிடிகளால் அது இப்போதைக்கு ஏற்படவில்லை.
மேட்டூரில் இருந்து 25 கி.மீட்டர் பயணித்து கொளத்தூர் வந்தடைந்து பயணத்தை தொடர்ந்தோம். அங்கிருத்து 2வது கி.மீட்டரில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு தான் சின்னத்தண்டா (chinna than;da) எனும் ஊர்க்கு செல்ல பிரிவு உள்ளது. அங்கு நம் வாகனத்திற்கு தேவையான பெட்ரோல் நிரப்பிக் கொண்டு கிளம்பினொம்.
நாம் செல்கிற சாலையின் வலது புறம் காவிரி ஆறு தொடர்ச்சியாக ஓடி மேட்டூர் அணைக்கு செல்கிறதுஅங்கிருந்து.காவேரிபுரம் தாண்டிச்சென்றால் வலதுபுறம் 5கி.மீட்டர் சென்றால் கோட்டையூர் பரிசல் துறை. அங்கு காவிரியில்சிறிது தூரம் பரிசலில் பயணம் செய்து வரலாம். செல்லும் வழிகள் எல்லாம் வாழைத்தோட்டங்களும் மிளகாய் தோட்டங்களும் நம்மை வரவேற்கின்றன , கொளத்தூர் மிளகாய்க்கு பெயர் பெற்றது.
அடுத்ததாக நாம் வந்தடந்தது கோவிந்தப்பாடி மேட்டூரில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் இங்கு சற்றே 5 நிமிடமாவது இளைப்பாறி செல்வது வழக்கம். நாமும் சற்றே இளைப்பாறியவாறு நம் பயணத்திற்கு தேவையான முருக்கு .பண்,(குரங்களுக்கு உணவாக கொடுக்க ) குடிநீர் ஆகியவை வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனப்பயணத்தை தொடர்ந்தோம்.
அங்கிருந்து கோவிந்தப்பாடி தாண்டினால் மலைப்பாதை துவங்குகிறது.
அடுத்து நாம் மலைப்பாதையில் பயணிக்க வேண்டியதாகிவிட்டது.
இங்கிருக்கும் காவேரிபுரத்தில்தான் வீரப்பன் என்கெளண்டர் முறையில் கொல்லப்பட்டான்.
கோவிந்தப்பாடி தாண்டியவுடனேயே கர்நாடக எல்லை சோதனைச் சாவடி நம்மை வரவேற்று அழைத்துச் செல்கிறது. சுமார் 30 கிமீ தொலைவிற்கு ஆளரவமற்ற அடர்ந்த வனப்பகுதி. வீரப்பன் சுமார் 40 ஆண்டுகளாக எப்படி காவல்துறையினருக்கும், அதிரடிப்படையினருக்கும் டிமிக்கி கொடுத்து கோலோச்சினான் என்று இப்பகுதிகளைப் பார்த்தவுடன்தான் தெரியவந்தது.
இடையில் காவிரியின் சிற்றோடகள்கள் அழகாய் குறுக்கிட பயணித்தால் சில கி.மீட்டர் தூரத்தில் பாலாறு சோதனைச்சாவடி வருகிறது.அங்கு புகைப்படம் எடுக்கும் அளவு காவிரியின் குறுக்கே பெரிய பாலமும் அழகிய பாலாறு நம்ம வியக்கவைக்கிறது. இவ்விடத்தில் இருந்து கர்நாடக எல்லைப்பகுதிக்கு நாம் வந்து விடுவதால் சோதனை சாவடியில் நம் வாகனத்தை தணிக்கை செய்து அனுப்புகிறார்கள் .
அடுத்து எங்கள் பயணம் தொடர்ந்தது . சற்று தூரத்திலியே வலது புரம் ஒகேனக்கல் 29 கி.மி,ஆலம்பாடி 34 கி.மீ கோபிநத்தம் 16 கி.மீட்டர் என பிரிகிறது. இவ்வழியே ஒகேனக்கல் செல்லலாம். ஆனால் முக்கிய நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியாது , அனால் அங்கிருந்து பரிசல் மூலம் நமது வாகனம் மற்றும் நம்மையும் ஏற்றி அக்கரையில் கொண்டு விடுகிறார்கள் அதற்கு 30 ருபாய் , 40 , ருபாய் கட்டணம் வசுளிகிரர்கள் பினர் அங்கிருந்து முக்கிய நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம் , அது அருமையான அனுபவம் ,, அதை தனியே எழுதுகிறேன் ,
மாதேஸ்வரன் மலை சாலையில் நேராக நம் பயணித்தை தொடர்ந்தோம்.
ஆங்காங்கே யானைகள் மற்றும் சிறுத்தைகளின் சஞ்சாரத்தை பறைசாற்றும் எச்சரிக்கைப் பல்கைகள் கன்னடத்திலும் ஆங்கிலத்திலுமாகத் தென்பட்டன. ஆனால் வழி நெடுகிலும் குரங்குகளைத் தவிர எதையுமே பார்க்கவில்லை.
ஆங்காங்கே இலந்தை மரங்கள் ,குரங்கள் பசியால் ரோட்டின் ஒரங்களில் வந்து மக்கள் வரவுக்காக காத்திருக்கின்றன நாங்கள் வாங்கிச் சென்ற பண், பொரிகளை உணவாக கொடுத்து விட்டு கிளம்பினோம். அடர்ந்த மலைப்பகுதியில் ஆட்கள் நடமாட்டமில்லாத அமைதி 18 குறுகிய கொண்டை ஊசி வளைவுகள் தாண்டி செல்ல வேண்டி இருப்பதால் கார். இரு சக்கர வாகனத்தில் கவனமாக செல்வது சிறப்பு.
அங்காங்கே மலைப் பசுக்கள் ,குரங்குகள் இவைகளை தான் காண முடிந்தது. வெயில் காலங்களில் யானைகள்,மான்களை பார்க்கலாம்.
கடைசியாக நாம் மலை உச்சிக்கு சென்றது போல் ஒரு பிரமிப்பு. அதே அளவில் பக்கத்தில் அழகான மலைகள்,அதன் மேல் மலைவாழ் மக்களின் குடியிருப்பு என தொடர்ந்த நம்பயணத்தை மற்றொரு சோதனைச்சாவடியில் நிறுத்தி வாகனத்திற்கேற்றவாறு வாகனக்கட்டணம் செலுத்தி அனுப்ப நாம் வந்தைடைந்தது மலை மாதேஸ்வர மலையின் முகப்பை அடைந்தோம்.
பாதை நெடுகிலும் ஒவ்வோர் அங்குலமும் இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான வனப்பகுதிகள். இவ்வளவு அழகுமிகுந்த பிரதேசங்கள் நமக்கு அருகிலேயே இருப்பது இவ்வளவு காலம் வரை தெரியாமல் போனது துரதிருஷ்டமே.
அட! இங்கு இருந்து பார்த்தால் சுற்றிலும் அழகான மலை நடுவில் மாதேஸ்வரர் திருக்கோவில் பிரமாண்டமாக அமைந்து நம்மை ஆச்சரியப்பட வைத்தது.
மேட்டூரில் இருந்து இரவில் பயணம் மேற்கொள்ளுவது மிகவும் ஆபத்தானது , காரணம் யானைகள் , சிறுத்தைகள், நடமாட்டம் இருக்கும் என உள்ளூர் வாசிகள் எச்சரிக்கின்றனர் .
கோவில் முன்பாக நெய் தீபம் என குச்சியால் சுற்றி வித்தியாசமாய் விற்கிறார்கள். பூக்கள் சிறுமிகள் ஒடி வந்து விற்கிறார்கள். சுற்றிலும் பழம், வெற்றிலை பாக்குக் கடைகள். ஆனால் விலை அத்தனையும் பகல் கொள்ளை. கோவிலுக்குள்ளேயும் பணம் மட்டுமே பிரதானம் என்று சொல்லும்படியாக, அர்ச்சனைத் தட்டில் பணத்தைப் போட்டால்தான் தீபாராதனை காண்பிக்கிறார்கள். கோவிலின் பிரதான வாயிலில் உள்ளமிகப் பெரிதான நந்தி அதை வணங்க படிக்கட்டில் ஏறி தரிசனம் செய்ய வேண்டும் ,நேர்த்திக் கடனாய் நெய்,பால்., தானியங்கள் கொண்டு வந்து தந்து பூஜிக்கிறார்கள்.
இந்த நந்தியை சுற்றிலும் பணம்,காசுகளை ஒட்டி அழகு பார்க்கின்றனர்.
நந்தி சிலையின் மீது பத்து ரூபாய், ஐம்பது ரூபாய் என நோட்டுக்களை வரிசையாக மாலை போல் கட்டி தொங்க விட்டுள்ளனர்.
சற்றே நடந்தால் நம் காலணிகளை பாதுகாக்க விட்டு திருக்கோவில் புத்தக நிலையம், குழந்தை வரம் வேண்டி தொட்டிகள், ஆகியவற்றை ரசித்து போனால்சிலர் ஏதோ தலை மயிற்றை முரம் போல செய்து தலையில் தட்டி, சிவப்பு கலர் உடையணிந்து நம்மூரில் மயிலிரகால் ஆசிர்வாதம் கொடுத்து காசு கேட்கிறார்களே அதைப்போல ஆசிர்வதிக்கிறார். விருப்பமிருந்தால் காசு கொடுக்கலாம்.
பக்தர்கள் பாதுகாப்பாகவும் வரிசையாகவும் செல்ல கம்பித்தடுப்புகள் அமைத்து அருமையாக செய்திருக்கிறார்கள்.தேங்காய், பழங்கள் மாற்றி உள்ளே சென்றால் மலை மாதேஸ்வரர் தரிசனம் நிம்மதி தரிசனம் கிடைக்கிறது. சிவ தரிசனம் செய்ய வில்வம் கொண்டு செல்வது சிறப்பு. கூட்டமில்லாத நாட்களில் சென்றால் நன்றாக தரிசனம் செய்து வரலாம். திருநீரும் வில்வமும் மாதேஸ்வரர் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
முதல் கால பூஜை காலை 6.00 மணிமுதல் 8.00 மணிவரை இரண்டாம் கால பூஜை காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை, மூன்றாம் கால பூஜை மாலை 6.45 மணி முதல் இரவு 8.30 மணி வரை. ஆயினும் பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் காலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
கோவில் பெரிதாக உள்ள அளவுக்கு அங்கு வருவோருக்கு வசதிகள் செய்து தரப்படவில்லை. சாப்பிடுவதற்கு நல்ல உணவகங்களோ, சிற்றுண்டி சாலைகளோ எதுவுமே இல்லை. ஏதோ சாலை ஓர டீக்கடைகள் போன்று அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கிறது. அதிக சுத்தம் மற்றும் கெளரவம் பேணுபவர்களுக்கு இந்த ஹோட்டல்கள் (??) லாயக்கில்லை. கட்டுசாத மூட்டை ஒன்றுதான் கதி.
ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்றும், ப்ரதோஷ தினத்தன்றும் நிற்கவே இடமில்லாமல் இம்மலை முழுவதும் கூட்டத்தால் நிரம்பி வழியுமாம்; உள்ளூர் கடைக்காரர்கள் சொன்னார்கள். அனைவருக்கும் தமிழ் தெரிந்திருப்பினும், கன்னடம்தான் பேச்சு மொழி. கோவில் நடை காலை ஒன்பது முதல் முற்பகல் பனிரெண்டு வரையும், பிறகு மதியம் இரண்டு முதல் ஆறரை வரையும் திறந்திருக்கும். அதற்குப் பிறகு பேருந்துகள் கிடையாது. காரணம் இரவில் யானைகள் மலைப்பாதையில் வருவதுதான் என்று கூறப்படுகிறது.
4 comments:
Na Chinna Ponna Iruthappa Angatha iruthom 3 yrs.. Itha Padikum Pothu Na Marupadiyum Anga poitu vantha Feel Kidachiruku... Thank U Sir.. Na Ammakita Poi Keka Poren Mathesvaramalaiku Eppa ma Polamnu...! :)
o.k , I will planed to go to m.m.hills for coming soon
சார் வணக்கம், என் பெயர் கதிரேசன் (கதிர்)
தினமணி நாளிதழில் நிருபராக பணிபுரிகிறேன்
தங்கள் தொடர்பு என் வேண்டும், தயவுகூர்ந்து
அழைக்கவும் ... 9865977117
சார் வணக்கம், என் பெயர் கதிரேசன் (கதிர்)
தினமணி நாளிதழில் நிருபராக பணிபுரிகிறேன்
தங்கள் தொடர்பு என் வேண்டும், தயவுகூர்ந்து
அழைக்கவும் ... 9865977117 or 8825551862
Post a Comment