தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Sunday, 1 July 2012

பட்டா மாறுதல் செய்வது எப்படி-பட்டா -4


பட்டா பெறுவது எப்படி 

பட்டா -4

பட்டா என்ற ஆவணத்தை பற்றி ஓரளவுக்கு முந்தய பதிவுகளில் தெரிந்துகொண்டோம் ,இனி பட்டா மாற்றம் செய்வது பற்றி அறிந்துகொள்வோம் ,,

'பட்டா' மாறுதலுக்கான விண்ணப்பம் அளித்தல் நடைமுறைகள் (Applying for Patta Name Transfer ie. Changing the Name of the Owner of an immovable property like farmlands.)

பொதுவாக வீடுகள், கட்டிடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் குறித்த உரிமைகளை மாற்றும் பொழுது, அந்த உரிமை மாற்றத்தை முறையாக ஆவணப்படுத்தி, அந்த ஆவணத்தை பதிவுத் துறையில் பதிவு செய்ய வேண்டும். இப்படிப் பதிவு செய்த பின்னர் அதுவே அச் சொத்தின் உரிமையைச் சொத்தை வாங்குபவருக்கு அளித்து விடும். என்றாலும், அந்த உரிமையை அரசு அங்கீகரிக்க வேண்டும். அந்த அங்கீகாரமே 'பட்டா' எனப்படும்.



அதாவது ஒருவர் தனது பெயரில் உள்ள சொத்துக்களை மற்றொருவருக்கு விலைக்கு விற்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர், அச்சொத்தை வாங்குபவருடன் சேர்ந்து, அந்த விற்பனை நடவடிக்கையை ஆவணப்படுத்த வேண்டும். இப்படி ஆவணப்படுத்துகையில், ஒரு சொத்தை விற்பவரே இந்த விற்பனை நடவடிக்கையை ஆவணப்படுத்தலாம். அல்லது இதற்காக விற்பவரும் வாங்குபவரும் சேர்ந்து, அரசிடம் முறையாக உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களை நாடலாம். இப்படி அந்த விற்பனை நடவடிக்கையை ஆவணப்படுத்துவதற்கு, உறுதியான, தூய்மையான வெள்ளைத் தாளில் விற்பவரின் பெயர், முழு முகவரி, சொத்தின் உரிமைக்கான வழிகள் உள்ளிட்ட தகவல்களுடன், சொத்தை வாங்குபவரின் பெயர், முழு முகவரி போன்ற விவரங்களுடன், அவற்றிற்கான சட்டப்பூர்வமான சான்றுகளுடன் ஆவணத்தைத் தயார் செய்து, அந்த ஆவணத்தை, அச்சொத்து உள்ள பகுதியின் சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று முறையாகப் பதிவு செய்ய வேண்டும். அங்கு, அப்பதிவிற்குப் பதிவுக் கட்டணமும், அச் சொத்தின் விற்பனை நடவடிக்கைக்கான வரிகளும் ரூபாய் மதிப்பில் பணமாக/ கேட்பு வரைவோலையாக கட்டப்படவேண்டும். இதில் பதிவுக்கட்டணத்தைத் தவிர்த்து, மற்ற வரிகளைப் பணமாகவோ அல்லது கேட்பு வரைவோலையாகவோ கட்டுவதற்குப் பதில் ஆவணப்படுத்துவதற்குப் பயன்படுத்தும் உறுதியான தூய்மையான வெள்ளைத் தாள்களுக்குப் பதில் அந்த வரிக்கு இணையான மதிப்புள்ள முத்திரைத் தாள்களைக் கூட வாங்கிக் கொள்ளலாம்.


இந்த ஆவணப்படுத்துதல் மற்றும் பதிவு செய்தலை இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்:

வழக்கமாகக் கடையில் சென்று ஒரு பொருளை வாங்குகிறோம். அப்பொருளுக்கு ஒரு பெயர் இருக்கும்; அதைச் சொன்னால் போதும்- கடைக்காரர் அதை எடுத்துக் கொடுத்துவிடுவார்- இது ஒரு விதமான வணிக நடவடிக்கை. இந்த நடவடிக்கையில் வாங்குபவர் கேட்கும் ஒரு பொருளின் பெயரைச் சொன்னாலே அதைக் கடைக்காரர் எடுத்துக் கொடுத்துவிடுவார். இங்கு ஒரு பெரிய அளவிலான ஒரு தொகை செலவழித்துச் செய்யப்படும் வணிக நடவடிக்கை ஒன்றை எடுத்துக்கொண்டால், அதாவது ஒரு இலகுரக இயக்கூர்தி- மகிழ்வுந்து ஒன்றைச் சுமார் நாற்பது இலட்ச ரூபாய்க்கு ஒருவர் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த வணிக நடவடிக்கையில் வாங்குபவர் பணத்தைக் கொடுக்கிறார்; விற்பவர் அதற்கான 'இரசீதுடன்' பொருளைக் கொடுக்கிறார். வாங்குவது என்பது இத்துடன் முடிந்துவிட்டது. வாங்கும் பொருளுக்கு ஒரு பெயர் இருக்கும்; அந்தப் பெயர் ஏற்கனவே வரையறுக்கப்பட்டிருக்கும்; அப்பொருளுக்கு ஒரு அடையாளமும் இருக்கும். அந்தப் பெயரைச் சொன்னால் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அப்பொருளுக்கு ஒரு நிலையான விலையும் இருக்கும். எனவே, விற்பனையாளர் தரும் 'இரசீது' அப்பொருளின் பெயர் மற்றும் அடையாளத்தைத் தாங்கி இருக்கும். அந்த விற்பனையாளர் ஒரு வழக்கமான விற்பனையாளர் என்பதால் அவரின் விற்பனையகத்தில் 'இரசீதுப் புத்தகம்' மற்றும் சட்டப்படியான அனைத்து ஆவணங்களும் இருக்கும்.

அதே நேரம் ஒரு அசையாச் சொத்தை ஒருவர் வாங்கும் போது அச் சொத்திற்கு அனைவருக்கும் தெரியுமளவிற்கு ஒரு வரையறுக்கப்பட்ட பெயர் இருக்காது. வீடு என்றோ, விளை நிலம் என்றோ ஒரு பொதுவான பெயரைக் குறிக்க முடியுமா? அல்லது சொத்தை விற்பவர்கள் வழக்கமான விற்பனையாளர்கள் இல்லை என்பதால் அவர்களிடம் 'இரசீதுப் புத்தகமும்' இருக்காது. எனவே, ஒரு பத்து 'ஏக்கர்' நன்செய் நிலத்தை வாங்கிக் கொண்டு உங்களிடம் பத்து ஏக்கர் நன்செய் நிலத்தை நான் வாங்கியாயிற்று; அதற்காக நான் செலுத்திய தொகைக்கு ஒரு 'இரசீது' போட்டுத் தாருங்கள் என்று என்றும் கேட்க முடியாது. அது இவ்வளவு எளிதான வேலையன்று. அதனால், இது போன்ற சொத்துக்களை விற்றல், மற்றும் வாங்குதலில் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணத்தைப் புதிதாகத் தயாரிக்க வேண்டும். அதாவது மகிழ்வுந்து வாங்கும் பொழுது விற்பனையாளர் தரும் 'இரசீது'வைப் போல, இங்கு ஒரு 'இரசீது' கொடுக்க வேண்டும். அந்த 'இரசீது' தான் ஆவணம் ஆகும். இந்த 'இரசீதில்', விற்பவர் மற்றும் வாங்குபவர் குறித்த தகவல்கள்- அதாவது பெயர், முழு முகவரி போன்றன- விற்கப்படும் சொத்தைப் பற்றிய முழு விவரங்கள்- அதாவது சொத்தின் பரப்பளவு, சொத்து இருக்கும் இடம், அச்சொத்தின் உரிமை விற்பவருக்கு எப்படி வந்தது, சொத்தின் தற்காலத்திய விலை மதிப்பு, இவர்கள் விற்கும் விலை உள்ளிட்ட விவரங்கள்- முழுமையாக இருக்க வேண்டும். இவ்விவரங்கள் அனைத்தும் அடங்கிய ஒரு ஆவணத்தைத் தயாரிக்க வேண்டும். இந்த ஆவணத்தைத் தயாரிக்கத் தெரிந்த விற்பனையாளர் தனக்காகத் தானே ஒரு ஆவணத்தைத் தயாரிக்கலாம். அல்லது அரசிடம் இசைவு பெற்ற ஆவன எழுத்தர் ஒருவரிடம் சென்று ஆவணப்படுத்தலாம். அப்படி ஆவணப்படுத்திய பின், அதை அப்பொழுதே முறையாக அப்பகுதிச் சார் பதிவாலரிடத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்குப் பதிவுக்கட்டனமும், முத்திரைத் தாள் கட்டணமும் விதிக்கப்படும். அப்படி விதிக்கப்படும் பதிவுக்கட்டனத்தைப் பணமாக அல்லது கேட்பு வரைவோலையாகச் செலுத்தலாம். முத்திரைத் தாள் கட்டணத்தையும் பணமாக அல்லது கேட்பு வரைவோலையாகச் செலுத்தலாம். இந்த முத்திரைத் தாள் கட்டணத்தை பணமாகவோ அல்லது கேட்பு வரைவோலையாகச் செலுத்துவதற்குப் பதிலாக, அக்கட்டனத்தின் அளவு முக மதிப்புள்ள முத்திரைத் தாள்களை வாங்கி, விற்பனை ஆவணத்தையே அம்முத்திரைத் தாள்களிலேயே தயாரித்து விடுதல் நடைமுறையில் உள்ளது. அதாவது, முத்திரைத் தாள் கட்டணத்தை முத்திரைத் தாள் வடிவிலும் அல்லது வேறு சில ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவிலும் செலுத்தலாம்.

இந்த ஆவணத்தைப் எழுதிப் பதிவு செய்யும் பொழுது, பதிவாளர் அலுவலகத்தில் 'முத்திரைத் தாள்' வரி என்று சொத்தின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தைக் கட்ட வேண்டும். அந்த வரியை நேரிடையாகக் கட்டுவதற்குப் பதிலாகத் தான், அந்த வரியின் மதிப்பின் அளவிற்குச் சமமான மதிப்புள்ள முத்திரைத் தாள்களை வாங்கி அத் தாள்களில் ஆவணத்தைத் தயார் செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.


விவசாய நிலங்கள், வீடுகள், காலி இடங்கள், கட்டிடங்கள் போன்ற அசையாச் சொத்தினை வாங்கும் பொழுது, அவற்றின் உரிமையாளர் பெயரை முறைப்படி வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு பட்டா மாறுதல் என்று பெயர்.

ஒருவர் அல்லது பலர் சேர்ந்து ஒரு அல்லது பல அசையாச் சொத்துக்களை விற்கும் பொழுது, விற்பவ(ர்களும்) ரும், வாங்குபவ(ர்களும்)ரும் சேர்ந்து அதற்காக ஒரு ஆவணம் தயாரித்து அதை முறைப்படி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். அப்படிப் பதிவு செய்த ஆவணத்துடன் சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பட்டா மாறுதல் செய்ய வேண்டும். இதற்கெனத் தனியாக விண்ணப்பப் படிவம் உள்ளது. அவ்விண்ணப்பத்தை முறையாகப் பூர்த்தி செய்து அல்லது அதே போல கையில் எழுதி ஒரு விண்ணப்பம் தயார் செய்து விண்ணப்பத்துடன் அச்சொத்தின் தற்போதைய உரிமை மாற்றத்திற்கு முந்தைய உரிமை மாற்றத்தின் நாளுக்கு முன்தினம் முதல் இந்த விண்ணப்பம் அளிக்கும் நாள் வரையிலான காலத்திற்கு சொத்து எந்தவித வில்லங்கத்திற்கும் உட்படுத்தப் படவில்லை என 'வில்லங்கச் சான்றிதழ்' ஒன்றையும் சேர்த்து விண்ணப்பிக்கவேண்டும்.

No comments: