சதுரகிரி -பகுதி -1
அறிமுகம்
சதுரகிரி , இந்த பெயரை
கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நம் தமிழ் நாட்டில் சிவ வழிபாட்டிற்கு, மனதுக்கு இதமான
இயற்கையின் அரவணைப்போடு மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பூலோக கயிலாயம்
என்று போற்றப்படுகிற, சித்தர்கள் இன்றும் ஜாலம் செய்யும் தவபூமி.
விருதுநகர் மாவட்டத்தில்
அமைந்துள்ள இந்த மலை, சமீப காலமாக தமிழகம் முழுவதும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்களால்
பௌர்ணமி, அமாவாசை தினங்களில் நிரம்பி வழிகிறது.
முதல் சித்தர் ,பதினெட்டு சித்தர்கள் என்கிற கணக்கு ஏனோ, எப்போதுமே சொல்லப் பட்டு வந்திருக்கிறது. நமக்குக் கிடைத்திருக்கும் சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டோடு நின்றுவிடவில்லை. அகத்தியர் முதலாய் வள்ளலார் வரையில் அநேக சித்தர்கள் பல்வேறுபட்ட காலப்பகுதிகளில் வாழ்ந்திருக்கின்றனர். நாம் அறிந்தும், அறியாமலும் இப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இவர்கள் எல்லாருக்கும் முதல்வராய், ஆதி சித்தர் யாரென தேடினால்......,
"நீ கேளு புலத்தியனே கற்ப மார்க்கம்
நிர்மலமாம் சதாசிவனார் என்னக்குச் சொன்னார்"
- அகத்தியர் -
"சிவனார் உரைத்த மொழி பரிவாய் சொன்னார்"
- தேரையர் -
"தாரணிந்த ஈசன்று ஆயிக்குச் சொல்ல
தாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல"
- போகர் -
"சொல்லவே தேவிக்கு சதாசிவன்தான்
சொல்லிடவே தேவியும் நந்திக்குச் சொல்ல"
- தன்வந்திரி -
"பாதிமதி அணிந்தவர் தான் சொன்னதிது
பதியான விதியாளி அறிவாள் பாரே"
- யூகிமுனி -
இது மாதிரி இன்னும் எத்தனையோ சித்தர்களின் பாடல்களை எடுத்தக் காட்டாய்ச் சொல்லலாம். இவர்கள் அனைவரும் சிவன் எனும் சிவபெருமான் சொன்னதாகவே சொல்லுகின்றனர். ஆக, சிவனே முதல் சித்தர் என்று அறுதியிட்டுக் கூறலாம். சித்தர்கள் வாழ்ந்ததாக கருதப் படும் இடங்களிலெல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை காணப்படுவது மூல குருவுக்கு வணக்கமாக இருக்கலாம்.
தென் தமிழகத்தின் மேற்கு
மலை தொடர்ச்சியில் சதுரகிரி மலை அமைந்துள்ளது சதுரம்-நான்கு, கிரி-மலை, நான்கு
பக்கங்களிலும் மலைகள் சூழ்ந்திருப்பதால் இதனை 'சதுரகிரி' என்று அழைக்கிறார்கள்
சதுரகிரிக்குச் செல்லும்
பாதை, இயற்கையாக அமைந்த ஒன்று. மலையை ஓரளவு குடைந்து மகாலிங்கத்தைக் தரிசிப்பதற்காக
ஏற்படுத்தப்பட்ட பாதை. வாகனங்கள் செல்ல முடியாது. யாவும் நடையாத்திரைதான்! குறுகலான
பாதை... கரடுமுரடான வழித்தடம். சபரிமலையில் உள்ளதுபோல் எந்த வசதியும் இங்கு கிடையாது.
செல்போன், தங்குவது, கழிப்பிடம் என்று எதற்குமே முறையான வசதியில்லை. இந்தப் பாதையில்
மேடும் பள்ளமும், குண்டும் குழியும் சகஜம். சில இடங்களில் பாதையின் அகலம் வெறும் மூன்றடி
மட்டுமே.
தனியே செல்வது நல்லதல்ல. முதன் முறை செல்பவர்கள் பௌர்ணமி அல்லது அமாவாசை தினங்களில் சென்று , நன்கு பழகியபின் சாதாரண தினங்களில் செல்லலாம். இதைபோலே மழைக் காலங்களில் செல்வது இன்னும் மனதுக்கு ரம்மியமாக இருக்கும். இங்கு நடமாடாத சித்தர்களே இல்லை . கிடைக்காத மூலிகைகளே இல்லை.
மதிமயக்கி வனம் என்று உள்ளே ஒரு அடர்ந்த வனப்பகுதி உள்ளது. உள்ளே சென்றவர்கள் யாரும் திரும்பியதே இல்லை. அவர்கள் மதியை மயக்கி அந்தே சிவமே ஆட்கொண்டுவிடுவதாகக் கூறுகிறார்கள். மலையை முழுவதும் மலைப் பளியர்கள் துணையுடன் சுற்றிப் பார்க்க ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் ஆகிறது. வனத்துறையிடம் விசேஷ அனுமதி பெற்று செல்லவேண்டும். பிரமிக்க வைக்கும் அனுபவங்கள் உங்களை நிச்சயம் பரவசப் படுத்தும்.
ஆன்மிகத் தேடல் இருப்பவர்க்கும், ஒரு வித்தியாசமான adventure அனுபவத்தை எதிர் பார்ப்பவர்களுக்கும் , அந்த சிவத்தை தொழும் சித்தர்களின் நிரந்தர வாசஸ்தலமாக விளங்கும் இந்த சதுரகிரி மலை யாத்திரை அனுபவம்.
கைலாஷ் யாத்திரை அனுபவம் எவ்வளவு பரவசமோ அதற்கு சற்றும் குறையாத, அந்த பயண அனுபவங்களையும், அந்த சுந்தர மகாலிங்கத்தின் பெருமைகளையும், அருள் திருவிளையாடல்களையும், இனி வரும் பதிவுகளில் பதிவு செய்வோம்
தொடரும்.... நமது சதுரகிரி பயணம் ...
No comments:
Post a Comment