பிக்பாக்கெட் திருடிகள் எச்சரிக்கை
சென்னை: சென்னையில் மின்சார ரயிலில் பயணித்த ஒரு வாலிபரின் முன்னும் பின்னும் நின்று கொண்டு அவரை உரசியபடி சில்மிஷம் செய்து அந்த நபரின் கவனத்தை கலைத்து, பிக்பாக்கெட் அடித்த இரண்டு பெண்களைப் போலீஸார் கைது செய்தனர்.
கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவர் அரக்கோணம் சென்றிருந்தார். அங்கிருந்து மூர் மார்க்கெட் போவதற்காக மின்சார ரயிலில் பயணித்தார். பெட்டியில் கூட்டம் அதிகம் இருந்தது. அந்த சமயத்தில் அந்த பயணியின் பின்னால் ஒரு பெண் நின்றிருந்தார். அதேபோல முன்னால் ஒரு பெண் நின்றிருந்தார். இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பது போல நடித்து, கும்பகோணம் பயணியை உரசியபடி வந்துள்ளனர்.
இருவரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு பக்கமாக நெருக்கி உரசியதால் கும்பகோணத்துக்காரர் தடுமாறிப் போனார். இதைப் பயன்படுத்தி அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை ஒரு பெண் திருடிக் கொண்டார். இது தெரியாத கும்பகோணத்துக்காரர் மூர்மார்க்கெட் வந்து சேர்ந்தார். அங்கு இறங்கிய பிறகுதான் தனது பர்ஸ் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் கூச்சல் போடவே, அந்த நேரத்தில் அங்கு நின்றிருந்த பெண் போலீஸார் சந்தேகப்பட்டு அந்த இரண்டு பெண்களையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் சோதனையிட்டதில் கும்பகோணத்துக்காரரின் பர்ஸ் அவர்களிடம் இருந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அந்த இரு பெண்களும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இதுபோல கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஆண் பயணிகளை உரசியபடி பயணம் செய்து அவர்களை திசை திருப்பி விட்டு விட்டு பர்ஸை சுடுவது இவர்களது தொழிலாம்.
நீதி: பஸ்சிலோ அல்லது ரயிலிலோ பெண்கள் உங்களை உரசுவது போல நின்றால், உணர்ச்சிவசப்படாமல்,ஹி ஹி ! சற்று கவனமாக இருப்பது நல்லது.
No comments:
Post a Comment