சேலம் மாவட்டம்
பகுதி -1
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
இன்றைய சேலம் நகர் பண்டைய கொங்கு நாட்டின் ஒரு
பகுதியாகும். சேரமன்னர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த இப்பகுதி
பின்னர் கங்கர்கள், சோழர்கள், பாண்டியர்கள் ஆகியோர் ஆட்சியின்கீழ்
வந்தது. தஞ்சையில் ஆட்சிபுரிந்த பிற்காலச் சோழர்கள் ஆட்சிக்
காலத்தில் கொங்கு நாடு வெல்லப்பட்டு அதிராஜ மண்டலம்
என அழைக்கப்பட்டது. சோழர் காலக் கல்வெட்டுகளில்தான்
இவ்வூர் (சேலம் என்று) முதன்முதலில் சுட்டப்படுகின்றது.
இராஜராஜன் தனது ஆட்சிக்காலத்தில் இவ்வூரில் ஒரு புதிய
குடியிருப்பை ஏற்படுத்தி அதற்குத் தம் பெயரையே சூட்டினார்
என்று அறியப்படுகிறது. கோப்பரகேசரி, கோவிராச கேசரி
போன்ற பட்டப் பெயர்களைத் தாங்கிய சோழமன்னர்கள்
இப்பகுதியை ஆட்சிப் புரிந்துள்ளனர். பிற்காலப் பாண்டிய
மன்னர்களில், சடையவர்மன் சுந்தர பாண்டியன்,
வீரபாண்டியன் போன்ற மன்னர்கள் இப்பகுதியை
ஆண்டுள்ளனர். ஒய்சாளர்களின் ஆட்சியிலும் பின்
விஜயநகரமன்னர்கள்ஆட்சியிலும்இப்பகுதிவந்தது.
கி.பி. 16ஆம் நூற்றாண்டில் இன்றைய சேலம் நகர்ப்பகுதி
மதுரை நாயக்க அரசின் ஆட்சிக்குட்பட்டது. திருமலை மன்னரின்
(கி.பி. 1623-59) பிரதிநிதியாகச் சலபதி நாயக்கர் என்பவர்
இப்பகுதியில் ஆட்சிபுரிந்தார். சலபதி நாயக்கர் மதுரை நாயக்க
அரசின் 72 பாளையக்காரர்களில் ஒருவர் ஆவார். எனவே,
பாளையக்காரரின் தலைமையிடமாக சேலம் விளங்கிற்று.
சலபதி நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கிறித்தவ சமயப் பெரியாரான
இராபர்ட் டி-நொபிலி சேலம் வந்தார் (கி.பி. 1624). சென்னப்ப
நாயக்கர், சீல நாயக்கர் ஆகியோர் இப்பகுதியை ஆட்சிபுரிந்த
இதர நாயக்கத் தலைவர்கள் ஆவர். சேலம் அயோத்தியா
பட்டணத்திலுள்ள பெருமாள் கோவில் நாயக்கர் ஆட்சிக்
காலத்தின் சின்னமாக விளங்குகிறது.
இதன் தொடர்ச்சி அடுத்த பதிப்பில்
No comments:
Post a Comment