கஞ்சமலை
பாகம் -4
இத்தலத்தில் அருள் புரியும் சித்தேஸ்வரரைப் பற்றி கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் உள்ளது.
கஞ்சமலை அடி வாரத்தில் உள்ளது நல்ல ணம்பட்டி என்னும் ஊர். இங்குள்ள சிறுவர் கள் மாடுகளை மேய்ப்பதற்காகக் காட்டிற்குச் செல்வது வழக்கம். பொழுதுபோக்கிற்காக அவர்கள் விளையாடும்போது, தோற்றவன் தலையில் வென்றவன் குட்டுவான். அப்போது ஒரு புதிய சிறுவன் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டான். தினமும் அவனே வெற்றி பெற்று தோற்றவர்கள் தலையில் குட்டுவான். மாடு மேய்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்த உணவினை நண்பகலில் சாப்பிடும்போது, அந்தப் புதிய சிறுவன் அங்கிருந்து விலகிச் சென்று மாடுகளின் மடியில் வாய் வைத்துப் பாலை உறிஞ்சிக் குடிப்பான். இதனைக் கண்ட ஒரு சிறுவன் தன் தந்தையிடம் கூறவே, மறுநாள் இந்தக் காட்சியை மறைந்திருந்து பார்த்தார் அவர். அந்தச் சிறுவன் மாடுகளின் மடியில் பால் குடிப்பதைக் கண்டதும், கோபமுற்ற அவர் பக்கத்திலிருந்த கயிற்றினால் அவனை அடித்தார். அடிபட்ட சிறுவன் இப்பொழுது கருவறை உள்ள இடத்தில் தவக்கோலத்தில் அமர்ந் தானாம். பல நாட்கள் தவத்தில் அமர்ந்த அந்தச் சிறுவன்தான் சித்தேஸ்வர சுவாமியாகக் காட்சி தருகிறார் என்கிறார்கள்.
அன்று கயிற்றால் அடிபட்ட நிகழ்ச்சியைக் கொண்டு இங்கு சித்திரை மாதத்தில் விழா நடைபெறுகிறது. அந்தச் சிறுவனை அடித்தவர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் விரதம் மேற் கொண்டு, விழா சமயத்தில் முடி எடுத்து நீராடி, அங்கப் பிரதட்சணம் செய்து கோவிலின்முன் அமர்வார். அப்போது அவரை மெல்லிய கயிற்றி னால் அடிப்பார்கள். அடிப்பவர்கள், அடிபடுபவரி டம் எப்பொழுது மழை பெய்யும் என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்பார்கள். அதற்கு அவர் பதில் கூறுவார். அவரது அருள்வாக்கு பலிக்குமாம். இந்த நிகழ்ச்சிதான் இந்த விழாவின் உச்சகட்டம் என்கிறார்கள்.
சித்திரை மாதப் பௌர்ணமி அன்றும் அதற்கு அடுத்த நாளும் இத்திருக்கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சமையல் செய்து அன்னதானம் வழங்குகிறார்கள். வாழை இலைக்குப் பதில் பாக்கு மட்டை பயன்படுத்தப்படுகிறது.
சித்தேஸ்வர சுவாமி கோவிலுக்கு கிழக்கே ஒரு சிறிய மலை உள்ளது. இதனை தியான மலை என்கிறார்கள். இம்மலையின் மேல் ஏறுவதற்குப் பாதை இல்லை. கரடுமுரடான பகுதியில் சிரமப் பட்டு ஏறினால் சுமார் பதினைந்து நிமிடங்களில் மேலே போய்விடலாம். அங்கே சுமார் பத்தடிக்கு பத்தடி அளவில் சமதளம் உள்ளது. அதன் நடுவில் ஒரு பாறை உள்ளது. அதனை தியானப் பாறை என்பர். அந்தத் தியானப் பாறைக்கு எதிரில் ஒரு சிறிய கோவில் உள்ளது. அதில் சந்தன மகாலிங்க சுவாமி சிறிய திருவுருவில் எழுந்தருளியுள்ளார். அவரைச் சுற்றி சில தெய்வங் களும் உள்ளன. அருகில் தல மரமான சந்தன மரச்செடி உள்ளது.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று அந்தத் தியானப் பாறையில் யாராவது ஒரு சித்தர் அமர்ந்து விடியும்வரை தியானம் செய்வது வழக்கமாம். புகை வடிவில் உருவில்லாத வெள்ளை நிற நிழல்போல் காட்சி தருவதை அந்த ஊர் மக்களும் பக்தர்களும் அடிவாரத்திலிருந்து தரிசித்திருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் யாரும் அந்த மலைமீது ஏறிச் செல்வதில்லை. காலை ஆறு மணிக்கு மேல் அங்கு சென்று பார்த்தால், சித்தர் அமர்ந்து தவம் செய்த அந்தப் பாறையிலிருந்து ஒரு மெல்லிய ஒலி எழும்பு வதையும் அந்தப் பாறை லேசாக அதிர்வது போலவும் இருக்கும் என்கிறார்கள். இந்த நிலை காலை ஏழு மணி வரை- அதாவது சூரிய ஒளி அந்தப் பாறைமீது விழும்வரை நீடிக்குமாம். இந்தத் தியானப் பாறை உள்ள மலைமீதிருந்து பார்த்தால் கஞ்சமலையின் முழுத்தோற்றத்தையும் தரிசிக்கலாம். இங்கும் மலைமேல் அன்னதானம் நடைபெறுகிறது.
இன்னொரு அதிசயமான செய்தியும் உண்டு. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கஞ்சமலையில் வகிக்கும் சித்த புருஷர்கள் ஜோதி வடிவில் கஞ்சமலையை வலம் வருவதைத் தரிசிக்கலாம். இரவு பதினோரு மணிக்கு மேல் கஞ்சமலையின் மேல்பகுதியில் சிறிய அளவில் நட்சத்திரம்போல் ஜோதிகள் காணப்படுமாம். அவை மெதுவாக நகர்ந்து மலையை வலம் வரும் என்று சொல்லப்படுகிறது. எல்லாரது கண்களுக்கும் ஜோதி தென்படாதாம். இந்தத் தரிசனத்தைக் காண்பவர்கள் பாக்கியவான்கள்.
அற்புதமான உயிர்காக்கும் மூலிகைகள்- குறிப்பாக காயகல்ப மூலிகைகள் நிறைந்த வியத்தகு செய்திகளைக் கொண்ட இந்த மலை மிகவும் போற்றக் கூடியது என்றால் மிகையல்ல.
இந்த மலைப்பகுதியில் கனிமங்கள் நிறைந்து காணப்படுவதால்தான், இந்த மலைக்கு அருகே சேலம் இரும்பாலை (உருக்காலை) அமைந்துள் ளது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment