தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Saturday, 23 June 2012

குடல் புண் (அல்சர்)


குடல் புண் (அல்சர்)




வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் இருக்கலாம்.
குடல் புண் என்றால் என்ன?
இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு. இதை அமில குடல் புண்நோய் என்றும் அழைக்கிறோம்.


புண் எதனால் ஏற்படுகிறது?
குடல் புண் தோன்றுவதற்கரிய காரணங்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை இருப்பினும் புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.

 சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது.

குடல் புண் வகைகள்
குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1) வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண் .
2)சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.
குடற்புண் இருப்பதை அறிவது எப்படி?
காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாகக் கொள்ளலாம்.
இந்தப் பகுதியில் ஏற்படும் அசெளகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம். சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ் வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாகக் காணப்படுகிறது.
சில நேரங்களில் அமில நீரானது வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம், வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு, அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும். இந்த மாதிரியான அசெளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒருநபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார். என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும். சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.
சிலருக்கு இவ்வலி, குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாகக் கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.
மருத்துவம் செய்யாவிட்டால்.
குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டல், ரத்தக் கசிவும் சமயத்தில் உதரப் போக்கும் ஏற்படும். ரத்தக் கசிவின் காரணமாக, அரைத்த காபிக் கொட்டை போன்று கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார், வலி நிவாரணியான ஆஸ்பரின் போன்றவற்றை சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ அல்லது ரத்தக் கசிவோ மிகவும் அபாயகரமானதாகும்.
இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புக்கள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. அதனால், வயிற்று அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதை உடனடி அறுவைச் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும்.சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது.இதுவும்அறுவைச் சிகிச்சையால்தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்..
செய்யக்கூடாதவை
  • புகைபிடிக்கக் கூடாது.
  • மது, காபி பானங்களை குடிக்கக் கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது.
  • அதிகமாகச் சாப்பிடக்கூடாது.
  • பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.
  • சாப்பிட வேண்டிய உணவுகளைத் தவிர்க்கக் கூடாது.
  • சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
  • இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது.
  • மனநிலையை தடுமாற விடக் கூடாது.
  • அவசரப்படக் கூடாது.
  • கவலைப்படக் கூடாது.
  • மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
செய்ய வேண்டியவை
  • குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும்
  • தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
  • அதிக வாழைப் பழங்களைச் சாப்பிட வேண்டும்.
  • தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
  • மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.
  • இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும்.
  • இருக்கமாக உடை அணியக் கூடாது.
  • மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்திக் கொள்ளலாம்.
  • யோகாசனம், தியானம் முதலியவற்றைப் பயில வேண்டும்.
  • எப்போதும் ஜாலியா இருக்க வேண்டும்
  • அலுவலக வேலைகளை அங்கேயே விட்டுவிட வேண்டும்.
  • முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும்.
  • சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
குடல் புண்ணுக்கு மருத்துவம் என்ன?
அனேக மருத்துவர்கள் பூரண ஓய்வையும் அதிகமான தூக்கத்தையும் சிபரிசு செய்கிறார்கள். தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும், புகை பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது முதலியவற்றை விட வேண்டும். அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். தூக்க மருந்துகளையும் தேவைப்பட்டால் மன அமைதி தரும் மருந்துகளையும் சாப்பிட வேண்டும். இவை தவிர, தற்காலத்தில் புரோபான்தளின், சிமிடிடின், ராணிடிடின், ·பாமாடிடின், சுரால்பேட், முதலியவும் பயன்படுகிறது, சிமிடிடின்தான் அதிகம் சிபரிசு செய்யப்படுகிறது. எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சாப்பிட வேண்டும்.
குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்ன?பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளைக் கீழே காணலாம். சத்தான சரிவிகித உணவு.
  • குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.
  • காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயைச் சாப்பிடக் கூடாது. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.
  • வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.
  • மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.
  • பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.
  • பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.
  • பால் சாப்பிடுவதை யாரும் சிபரிசு செய்வதில்லை.
நன்றி: Dr.அம்புஜவல்லி, தஞ்சாவூர் - தமிழ்குருவி

Monday, 11 June 2012

கொல்லிமலை -பகுதி -4


கொல்லிமலை -பகுதி -4

கொல்லிமலையில் ஒரு வரலாற்று ஆதாரம்

நவகண்ட பலி சிற்பம்


கொல்லிமலை  பயணக்கட்டுரையில் உங்களுக்கு ஒரு கதை
 சொல்லபோறேன் ..அது உண்மையாக நடந்த கதை.அதுதான் " நவகண்டபலி கதை "

ஆம் நவகண்ட பலி சிற்பம் ,இது பண்டைய காலங்களில் இரு ஊருகளுக்கு ..??!! உண்மையா சொன்னா ...??..எதுக்கு வம்பு ...(இருந்தாலும் மனசு சொல்லவந்ததை சொல்லிவிடுகிறேன் ..அதுதாங்க நம்ம தமிழகத்தில் தெருவுக்கு ஒரு ராஜா வீட்டுக்கு ஒரு மந்திரி இருந்த காலத்தில் ) இரண்டு பெரிய வீட்டுகாரன்களுக்கு இடையில் ...மன்னிக்கவும் .இரண்டு நாடுகளுக்கு இடையே போர் (அதுதாங்க வெட்டி வீராப்பு சண்டை )ஏற்படும் போது  தங்கள் தலைவன்... ஐயோ ..மீண்டும் மன்னிக்கவும் அரசன்... அரசன்  ..ஓகே ஓகே ...அந்த அரசன் .வெற்றி பெற வேண்டும் என ஒரு அப்பாவிய சுதிஏத்தி தற்கொலை செய்ய தூண்டும் ஒரு வழக்கம் இருந்தது ..??!!அதுதாங்க பலிகடா

 அந்த மாதிரி ஒரு அப்பாவி வீரன் தன் தலையை தானே வாளால் வெட்டிக்கொண்டு செத்துபோவது என்ற  ஒரு கேடு கெட்ட வழக்கம் நடைமுறையில் இருந்தது
 (அது தாங்க இபோது எல்லாம் செயராங்கலே ...தலைவனுக்காக தீ குளிக்கும் கொடுமை அது  போன்றது தான் )

சரி..மீண்டும்  சங்ககாலத்துக்கு வருவோம் ....இப்படி வாளால் தனது உடலில் 8
 இடங்களில் தானே சதையை வெட்டிகொண்ட பிறகு 9 முறையாக ..தன் தலையை வாளால் தானே வெட்டிக்கொண்டு நாட்டுகாக !!..?? தன் தலைவன் ஜெயிக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் !!..??..செத்து போவதே...!! (கொல்லபடுவதே )...."நவகண்ட பலி "

அதுவும் கடவுள் சன்னதி முன்பாக...!! (அப்பதானே இந்த அப்பாவிகளை கடவுள் பெயரை சொல்லி தெய்வீக மரணம் ..?நேரே சொர்க்கம் தான் ..?என்று எல்லாம் பிரைன் வாஷ் பண்ணமுடியும் ....என்ன கொடுமை சார் இது ..??)இந்த "நவகண்ட பலி "

இப்ப புரியுதா ? இந்த "நவகண்ட பலி "னா என்னானு ..அதிலும் கொடுமை இந்த செத்து  போன வீரனின் தலையை ஒரு நீண்ட கொம்பில்
(தடியில் )கட்டி...!!??  குதிரை வீரனிடம் கொடுத்துபோர்முனைக்கு அனுப்பி  பிற போர் வீரர்களை எழுச்சியுற செய்வார்களாம் ...

வாழ்க..! அடிமைத்தன வீரம் .....!!??

 அப்படி அநியாயமாக செத்து போனவனுக்கு (அதாவது தன்னை பலியிட்டுகொள்பவனுக்கு) அவனின் தியாகத்தை ...?போற்றி அவனின் திவுருவ சிலையினை செய்து ,அவனை கடவுளாகவும் ,அவன் சார்ந்த சாதியின் குலதெய்வமாகவும் வழிபட்டு வந்தனர் ...நம் முன்னோர்கள் .....அப்பாடா ....விளக்கம் முடிந்தது ....


இதெல்லாம் எதுக்குனா ..அப்படிப்பட்ட ஒரு அப்பாவி வீரனின் சிலை ஒன்று நம்ம கொல்லிமலை அரப்பளிஸ்வரர் கோவில் முன்புறம் காணலாம் என்பதற்காகத்தான் ...வாழ்க அந்த அப்பாவி மாவீரன் .

இதோ அந்த சிலை உங்களுக்காக .கண்டு  கண்ணீர்  விடுங்கள் இந்த முட்டாள் தனத்தை எண்ணி ...



கோவில் நுழை வாசல் அருகில் இதோ இந்த விளக்கு போஸ்ட் உள்ளதல்லவா அதற்க்கு நேர் எதிரில் தான் உள்ளது ..இரண்டு சக்கர வாகனங்களை அல்லது கார்களை நறுத்தி மறைத்திருப்பார்கள் நீங்கள்தான் சற்று அவற்றிக்கு பின்னால் போய் பார்க்கவேண்டும் 



















Friday, 8 June 2012

மாதேஸ்வர மலை-நாகமலை





நாகமலை 



SRI NAGAMALAI ,MATHESWARA HILLS; KARNATAKA STATE

நாகமலை என்பது சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து மாதேஷ்வரமலை சென்றால் கர்நாடக மாநிலம் அடைந்து ஸ்ரீ மாதேஸ்வரரை தரிசனம் செய்து அங்கிருந்து நாகமலைக்கு செல்ல வேண்டும் எனக்கேட்டால் சொல்வார்கள் .

ஸ்ரீ மாதேஷ்வரமலையில் இருந்து 14 கி.மீ தூரத்தில் நாகமலை அமையப்பெற்றுள்ளது. 7 கி.மீட்டர் மாதேஷ்வரமலையில் இருந்து ஜீப் பயணம் கரடுமுரடான திகில் பயணத்துடன் செங்குத்தான செம்மண் மலைபாதைகளில் நம் பயணம் தொடர்ந்தது.

அங்கே சிறிய ஊரை அடைந்தோம் . இங்கிருந்து நாகமலைக்கு 6 கி.மீட்டர் மலையில் நடந்து செல்ல வேண்டும். ஜீப்பீல் மாதேஷ்வர மலையில் இருந்து நபர் ஒருவருக்கு ரூ 35 கொடுத்தால் 7 கி.மீட்டர் மலைப்பாதையில் கடந்து ஓர் கிராமத்தில் இறக்கி விடுகிறார்கள் . மலைக்கிராமமான இங்கு ஏழ்மைகள் தவழ குழந்தைகள் விளையாடுகிறது. சிறிய பள்ளிக்கூடமும் டீக்கடைகளும் இங்கு உண்டு .

நடக்க ஆரம்பித்தால் வளைந்து செல்லும் சாலைகள் நடக்க இந்த கிராமம் தாண்டினால் சமப்பகுதி வருகிறது.யானைகள் உலவும் இடமாகவும் கடக்கும் வழிகள் இருப்பதால் கவனமாக செல்லவும் . மலைகள் ஏற ஆரம்பித்தால் சிறியதும் பெரியதுமாக 7 மலைகள் ஏற வேண்டும் .எளிதான மலைதான் 4 மணி நேரத்தில் எளிதாக அடைந்து விடலாம் .

வயதானவர்கள் கூட மலை ஏறலாம் . 7மலை என்று சொன்னாலும் கூட 3 மலைகள் தான் கடப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.

நாகமலை அடிவாரம் இண்டிக நத்தம் :

ஓர் வழியாக பயணித்து நாகமலை அடிவாரத்தில் இண்டிக நத்தம் என்ற ஊரை அடைந்தோம் . பக்தர்கள் பயன்படுத்த இரண்டு கிணறுகள் , ஓர் உணவுக்கடை , மற்றும் சில டீக்கடைகள் இங்கு உள்ளன. இங்கு குளிப்பவர்கள் கிணற்று நீரை வாளியில் இழுத்து பயண்படுத்திக்கொள்ளலாம் .


அடிவார விநாகர் திருக்கோவில் வணங்கி ,அருகில் உள்ள சனீஷ்வரர் தனிச்சன்னதியை வணங்கி சற்றே மேலே சென்றால் சிறிய மலையின் உச்சியில் நாகமலை அமைந்துள்ளது.

மூலவர் :

லிங்க உருவில் அமைந்துள்ள மாதேஸ்வரர் ஆவார். 7தலை கொண்ட தலைநாகமாக அமைந்துள்ளது. இயல்பாக லிங்கம் சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார் . .மாதேஷ்வரர் தற்போதுள்ள ஸ்ரீ மலைமாதேஸ்வரர் நடுமலைக்கு வருவதற்கு முன் நாகமலையில் சஞ்சாரம் செய்ததாக வரலாறு.

 

இங்கு லிங்க உருவில் நாகேஷ்வரராக காட்சி அளிக்கிறார் . நாகமலைக்குன்றின் வலப்பக்கம் சிறிய குகை உள்ளது. அதில் பக்தர்கள் பசும்பால் இட அது நீலநிறமாக மாறும் ஆச்சர்யம் காணலாம் . நாகமே சிவனைக்காக்கின்ற அமைப்பும் வித்தியாசமானதாகும் .

நாகமலை பெயர் காரணமும் அதிசயமும் :

திருக்கோவில் அமைவிடத்தின் பின்புறம் மிகப்பெரிய லிங்க உருவில் பாறையும் அதன் பின்னால் நாகப்பாம்பு உருவில் அந்த லிங்கத்தை பாதுகாப்பதுபோல் படம் எடுத்த நிலையில் பெரிய பாறையும் மிகப்பெரிய ஆச்சர்யம் அளிக்கிறது. போட்டோவை இணைத்துள்ளேன் பாருங்கள் .

திருக்கோவில் காலம் :

சுமார் 800முதல் 1000ஆண்டுகாலமாக இங்குள்ள மலைவாழ்மக்களான லிங்காயத்துகளால் பத்து தலைமுறைகளாக பூஜை செய்து வருவதாக செவிவழிச்செய்திகளாகும் . சான்றுகள் இல்லா விட்டாலும் மிகப்பழமை கொண்ட மலையாகும் . இங்குதான் ஸ்ரீமாதேஷ்வரர் புலியின் மீதேறி வலம் வந்தாராம் .நாக சர்ப்பம் இன்னும் இந்த நாகமலையில் ஏராளமாக வாழ்வதாகவும் பக்தர்கள் நம்பிக்கை

ஸ்தலமரம் :

பயிரன் மரம் மூலவர் எதிரே அமைந்துள்ளது . அருகே முகப்பில் விநாகர் அமைந்துள்ளார் .

 

பூஜைநாட்கள் :

எல்லா விஷேச நாட்களிலும் கூட்டம் இருந்தாலும் அமாவசை அன்று கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஸ்ரீ மாதேஸ்வரர் :

முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவனிடம் அசுரர்களை அழிக்க வேண்டியதாகவும் பின் ஸ்ரீ சைலத்தில் உத்திரராஜம்மா ,சந்திரசேகரமூர்த்திக்கு மகனாக ஸ்ரீ மாதேஸ்வரர் பிறந்து 16 வயதில் சிவாம்சம் பொருந்திய சித்தராக சாமியாக சிவனாக வணங்கப்படுகிற பல அற்புதங்களை காண்பித்தவர் .

புலி மேல் வலம் வந்து மகிமாசுரன் சிரவணா போன்ற அசுரர்கள் அழிக்க வந்த சிவனாக வழங்கப்படுகிறவர் . நாகமலையை சுற்றி பல மலைகள் அரணாக காக்கின்றன . இங்கு எல்லாம் ஸ்ரீ மாதேஸ்வரர் வலம் வந்ததால் பக்தர்கள் செருப்பில்லாமல் மலை ஏறுகிறார்கள் . அசுரர்களை அழித்த இடம் சித்தூர் மட்டமாகும் .

நாகமலை சுற்றியுள்ள மலைகள் :

மயில் மலை, தேவுமலை ,ஆதி மாதேஷ்வரமலை ,கோடுகல் மாதேஷ்வரமலை, ஆணைத்தலை திம்பம் , தப்பசரைபெட்டா, குஞ்சுமலை, கத்திரி மலை , குருகஞ்சிமலை, சங்குமலை,தேன்மலை என நாகமலையை சுற்றிலும் மிகப்பிரமாண்ட மலைகள் அமைந்துள்ளன.

எல்லா மலைகளிலும் ஸ்ரீ மாதேஸ்வரர் சஞ்சாரம் செய்தாலும் நாகமலையில் வலம் வந்து கடைசியாக தற்போது அமைந்துள்ள நடுமலையில் மலை மாதேஸ்வரர் வந்து புற்றுக்கண்ணில் ஐக்கியமாகி வரும் பக்தர்களுக்காக சுயம்பு லிங்கமாக அமைந்து அருளாட்சி புரிகிறார் .


20 வருடமாக அமாவசை தொடர்ந்து வரும் பக்தர்கள் ஏராளம் . வீடு, திருமணம், குழந்தைவரம் .போன்ற சுப நிகழ்வு பிரார்த்தனைகள் இங்கு எளிதாக நிறைவேறுகிறது. ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஜாதக தடை உள்ளவர்கள் கண்டிப்பாக தரிசனம் செய்யதால் பலன் நிச்சயம் .

பெங்களூர் பக்தர் ஒருவர் தன் மகன் வேலைக்காக வேண்டி வேலை கிடைத்தும் கோபிநத்தத்தில் இருந்து மின்சார வசதியை நாகமலைக்கு கொண்டு வந்து தன்பங்காக திருக்கோவிலை ஒளிர விட்டுள்ளார். '


சுயம்பு மூர்த்தியாய் சிவலிங்கம் நாகமலையில் சிவனைக்காக்கிற அதிசயம் காண ஓர் முறை செல்லுங்கள் . பல தடைகளை தாண்டியே எம்மால் செல்ல முடிந்தது ." அவனவன் பால் அவன் தாள் வணங்கி" என்னும் இறை கூற்றிற்கு ஏற்ப இறைவன் அழைத்தால் மட்டுமே செல்லக்கூடிய திருக்கோவில் .

வாய்ப்பு கிடைத்தால் ஒர்முறை வந்து தரிசித்து விட்டு செல்லுங்கள் . இதைப்படிக்கிற உங்களுக்கும் வாழ்வில் மாற்றங்களும் ஏற்றங்களும் வர ஸ்ரீ நாகமலை ஆண்டவரை வேண்டுகிறேன் .

பயனபாடு 

சேலத்தில் இருந்து மேட்டூர் அங்கிருந்து மாதேஸ்வரன் மலை அங்கிருந்து நாகமலை